முதல் மஸ்ஜித்

முதல் ஆலயம் اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏  وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلاَةٍ உலகத்தில் உள்ள நகரங்களில் மிக சிறந்த நகரம் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா என்ற நகரமாகும். இது வரலாற்று ரீதியாக மிகவும் தொன்மையான நகரமாகும். இது அனைத்து இறைத்தூதர்களும் கால் பதித்த புண்ணிய பூமியாகும். உலக முஸ்லிம்கள் அதை நோக்கியே தொழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் முதன்முதலில் பூமியை விரித்தபோது முதலில் மக்காவை தான் உருவாக்கினான். ஆகவேதான் உம்முல் குரா (நகரங்களின் தாய்) என பெயர் வரலாயிற்று. ஒரு பெண் தொலைந்துப் போன தன் பிள்ளையை நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கும் போது என்ன மனநிலையில் இருப்பாளோ அது போன்று தான் கஅபாவை முதன்முறையாக பார்ப்பவனின் மனநிலையும் இருக்கும். அவனையும் அறியாமல் அவனது கண்கள் கண்ணீர் வடிக்கும். அல்லாஹ்வையே பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். மேலும் கஅபாவை விட்டு பிரிந்து வரும்போது மீண்டும் எப்போது சந்திப்பது என்ற ஏக்கத்துடன் கண்கள் கண்ணீரை வடிக்கும். இது அங்கே இயல்பானது. اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏ (இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக "பக்காவில்" (மக்காவில்) இருப்பது தான். அது மிக்க அருள்வளமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. திருக்குர்ஆன்:- 3:96 அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் மக்கா அல்லது மதீனா ஆகிய இரு நகரத்தில் எங்கு மரணமடைந்தாலும் அவரிடம் மறுமை நாளில் எவ்வித விசாரணையுமின்றி நீ சொர்க்கம் செல் என்று சொல்லப்படும். நூல்:- இஹ்யா யூதர்கள் "பைத்துல் முகத்தஸ் அமைந்துள்ள நகரம் மற்ற அனைத்து நகரங்களையும்விட மேன்மையானது" என்று கூறி வந்தனர். ஏனெனில் அங்கு பல இறைத்தூதர்கள் வாழ்ந்திருந்தார்கள். இவர்களின் வாதம் தவறானது என்பதை சுட்டிக்காட்டவே தலைப்பில் காணும் திருவசனம் அருளப்பட்டது. நூல்:- துர்ருல் மன்ஸூர் முல்லா அலீ காரீ (ரஹ்) கூறுகிறார்கள். அல்லாஹு தஆலா தன் கஃபாவை புனிதப்படுத்த கஃபாவின் கீழ் 70 நபிமார்களின் மண்ணறைகளை வைத்துள்ளான் . அதாவது கஃபாவில் 70 நபிமார்கள் அடங்கியுள்ளர்கள். நூல்:- மிர்காத் 1/486 கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلاَةٍ ) ஒருவர் (பாலஸ்தீனில் உள்ள) பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலில் ஒருமுறை தொழுதால் 50 ஆயிரம் தொழுகைகளின் நன்மைகள் அவருக்கு கிடைக்கும். என்னுடைய பள்ளிவாசலில் (மஸ்ஜிதுந் நபவியில்) ஒருமுறை தொழுதால் 50 ஆயிரம் தொழுகைகளின் நன்மைகள் அவருக்கு கிடைக்கும். (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராமில் ஒருமுறை தொழுதால் ஒரு இலட்சம் தொழுகைகளின் நன்மைகள் அவருக்கு கிடைக்கும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி)அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1413 மஸ்ஜிதுல் ஹாரமில் ஒரு நேர ஃபர்ளை தொழுதால் ஒரு லட்சம் ஃபர்ளுகள் தொழுத நன்மைகள் கிடைக்கும். நாம் வாழ்நாளில் ஒரு லட்சம் ஃபர்ளுகள் தொழுக ஏறக்குறைய 55 ஆண்டுகள் தேவைப்படும். இந்த அடிப்படையில் நாம் மஸ்ஜிதுல் ஹாரமில் ஒரு நாள் ஐவேளை ஃபர்ளு தொழுகைகள் இமாம் ஜமாஅத்துடன் தொழுதால் ஏறக்குறைய 277 ஆண்டுகள் ஃபர்ளு தொழுகைகள் தொழுத நன்மைகள் கிடைக்கும். நமது ஆயுளே இதில் நான்கில் ஒரு பகுதி தான். இந்நிலையில் நாம் அதில் 15 நாட்கள் தொழுதால் ஏறக்குறைய 1467 ஆண்டுகள் ஃபர்ளு தொழுகைகள் தொழ நன்மைகள் கிடைக்கும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُنْزِلُ اللهُ كُلَّ يومٍ على حُجّاجِ بَيْتِه الحرامِ عِشرِينَ ومِائةَ رَحمةٍ، سِتِّينَ لِلطّائِفِينَ، وأربعِينَ لِلمُصَلِّينَ، وعِشرِينَ لِلنّاظِرينَ ) அல்லாஹ் புனித கஅபாவின் மீது தினந்தோறும் 120 (ரஹ்மத்துக்கள் எனும்) இறையருளை இறக்குகின்றான். அதில் 60 ரஹ்மத்துக்கள் கஅபாவை தவாஃப் செய்வோர் மீதும், 40 ரஹ்மத்துக்கள் அங்கு தொழக்கூடியவர்கள் மீதும், 20 ரஹ்மத்துக்கள் கஅபாவை வெறுமனே நேரடியாக பார்த்துக் கொண்டிருப்போர் மீதும் இறக்குகின்றான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ, மஜ்மஉஸ் ஸவாயித், தப்ரானீ, அத்தர்ஙீபு வத்தர்ஹுபு, அல்மதலிபுல் அலியா அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கஅபாவை நேரடியாக பார்த்தாலே நன்மை கிடைக்கும். இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். கஅபாவை நேரடியாக பார்ப்பவர் மக்கா நகருக்கு வெளியே பெரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருப்பவருக்கு நிகரானவராவார். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் இறை நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே அவர்கள் இவ்வருடத்திற்குப் பின்னர் இனி சிறப்புற்ற இப்பள்ளியை நெருங்க வேண்டாம். திருக்குர்ஆன்:-9:28 கஅபாவை நேரடியாக பார்ப்பதே ஒரு வணக்கமாக இருப்பதால் தான் இணைவைப்பவர்கள் அங்கு நுழைவதை அல்லாஹ் தடுத்துள்ளான். ஏனெனில் அவர்களின் வணக்கங்களை அல்லாஹ் அங்கீகரிப்பதில்லை. தூய்மையான பிராத்தனை நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் ஆணைக்கிணங்க தனது மனைவி ஹாஜரா (அலை) அவர்கள், மற்றும் பால்குடி வயதிலுள்ள தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அழைத்து வந்து மனிதப் புழக்கமோ வேறெந்த பொருட்களுமோ இல்லாத தற்போது கஅபா இருக்கும் அந்த பாலைவனப் பள்ளதாக்கில் விட்டு விட்டு திரும்பிச் சென்று மலைக்குன்றின் அருகே தனது முகத்தை இறையில்லமான கஅபாவை நோக்கி தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள் என்று திருக்குர்ஆன் (14:37) இயம்புகிறது. எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததியினரை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்க செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளதாக்கு! எங்கள் இறைவா! அவர்கள் (உன்னை) தொழுதுக்கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்க செய்தேன்) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனிவர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். என்று இறைஞ்சினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3364 இந்த பிரார்த்தனை அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி சிரமப்படும் தன் குடும்பத்தினருக்கு உணவு கிடைக்க கேட்கப்பட்ட பிரார்த்தனை. உதவிக்கு ஒருவரும் இல்லாமல் தன்னந்தனியாக விடப்பட்ட தன் குடும்பத்தினருக்கு துணையை வேண்டிய பிரார்த்தனை. ஆனாலும் அது தொலைநோக்கோடு கேட்கப்பட்ட பிரார்த்தனையால் கேட்ட உடனே ஹாஜரா (அலை) அவர்களுக்கும், அவருடைய பால்குடி குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கும் பலன் கொடுத்தது மட்டுமல்லாமல் 5௦௦௦ ஆண்டுகள் கடந்த பிறகும் இன்னும் அதன் பலன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒருசமயம் தனது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் காண மக்கா நகர் வந்தார்கள். அப்போது மகனார் வீட்டில் இல்லை. வீட்டிலிருந்த மருமகள் தனது கணவர் வெளியே சென்றிருப்பதாகக் கூறினார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ( كَيْفَ أَنْتُمْ ) "நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? (நலம்தானா)?" என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்கள். அதற்கு அவர்களின் மருமகள், "நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ( مَا طَعَامُكُمْ ) "உங்கள் உணவு என்ன?" என்று கேட்க அவர், "இறைச்சி" என்று பதிலளித்தார். அவர்கள், ( فَمَا شَرَابُكُمْ ) "உங்கள் பானம் எது?" என்று கேட்க, "தண்ணீர்" என்று பதிலளித்தார். அப்போது தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் ( اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي اللَّحْمِ وَالْمَاءِ‏ ) "இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும், தண்ணீரிலும் அருள்வளம் புரிவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். நூல்:- புகாரீ-3364 மக்கா பாலைவனப் பூமி தான். என்றாலும் எந்த காலத்திலும் அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதில்லை. ஹரம் ஷரிஃபுக்குள் இருக்கும் ஸம்ஸம் கிணற்றிலிருந்து ஒரு வினாடிக்கு சுமார் 8000 லிட்டர் என்ற அளவில் தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடைவேளையின்றி ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. நல்ல நீர்வளம் உள்ள கிணற்றில் ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை ஒரே நாளில் ஸம்ஸம் கிணற்றிலிருந்து எடுக்கப்படுவது மிகப்பெரிய அதிசயமாகும். அங்கு புனித கஅபாவை தரிசிப்பதற்காக உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் தினமும் இலட்சக்கணக்கில் மக்கள் வந்து கூடுகின்றனர். ஹஜ் காலத்தில் சுமார் 40 இலட்சம் பேர் வரை யாத்ரீகர்கள் கூடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் போதுமான உணவுப் பொருட்களும், அத்தியாவசியப் பொருட்களும் அங்கு தாரளமாக கிடைக்கின்றன. அங்கு ஆண்டுதோறும் ஹஜ்ஜுக்கு வருகின்ற ஒவ்வொரு ஹாஜியும் குறைந்தது ஒரு ஆடும் மேலும் வசதியுள்ளவர்கள் சில நூறு ஆடுகள் வரையிலும் இலட்சக்கணக்கானோர் பலியிடுதல் எனும் குர்பானியைக் கொடுக்கின்றனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான மாடு, ஒட்டகைகளும் அப்போது அங்கு குர்பானி கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் எண்ணிலடங்கா ஆடு, மாடு, ஒட்டகைகள் பலியிடப்பட்டாலும் அங்கு இந்த கால்நடைகள் விஷயத்தில் பஞ்சம் ஏற்பட்டதில்லை. அவை தாராளமாகவே கிடைக்கின்றன. "முபாரக்கன்" என்றால் அதிகமான நன்மைகளும், நலவுகளும் கிடைப்பதற்குச் சொல்லப்படும். மக்காவில் செய்யப்படும் நன்மைகள் பன்மடங்காக ஆக்கப்படும். அங்கே நிறைவேற்றப்படும் தொழுகை, நோன்பு, தானம் தர்மம் போன்ற ஒவ்வொரு வணக்கங்களுக்கும் ஒவ்வொரு லட்சம் வணக்கங்களின் நற்கூலி வழங்கப்படுகிறது. இவ்வாறான அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுத்தரும் ஹஜ்-உம்ரா என்ற வணக்கங்களை அங்கு மட்டும் தான் செய்ய முடியும். மக்கா நகரில் இப்ராஹீம் (அலை) அவர்கள் காலம் முதல் இன்று வரை உள்ளூர்வாசிகளுக்கும், வெளியூர்வாசிகளுக்கும் உணவுப்பற்றாக்குறையோ, பஞ்சமோ ஏற்பட்டதே இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்டது என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. அது விவசாய பூமியல்ல. ஆனாலும் அனைத்து வகையான உணவுகளும், காய்கனிகளும் அங்கு கிடைக்கும். அது தொழிற்சாலைகள் நிறைந்த நகரமல்ல. ஆனாலும் புதிதாக கண்டுபிடிக்கப்படும் நவீன சாதனங்கள், கருவிகள் அனைத்தும் அங்குள்ள சந்தைகளில் கிடைக்கும். பாலைவனப் பிரதேசமாகவே இருக்கும் மக்கா நகரின் வியாபாரத் தளங்களில் உலகத்தில் விளைகின்ற அனைத்து வகையான கனிகளும், உணவுப்பொருட்களும் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், உலகில் வாழும் பல கோடி முஸ்லிம்கள் அந்த மக்கா நகரின் பக்கம் கவரப்பட்டவர்களாக வாழ்வில் ஒருமுறையாவது அங்கு சென்று வர வேண்டும் என துடிப்பதும், ஒருமுறை சென்றவர்கள் மீண்டும் மீண்டும் அந்த பூமியில் கால்பதித்து பல வணக்கங்கள் புரிந்திட வேண்டுமென ஆவல் கொள்வதும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையின் பலன் தான்! என்றால் அது மிகையாகாது. மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், மனத்தூய்மை, பாவமன்னிப்பின் சிந்தனை, உணவுகள் ஆகியவற்றில் அருள்வளம் செய்யப்படுகிறது. இதைத்தான் தலைப்பில் காணும் திருவசனம் இரத்தினச் சுருக்கமாக கூறுகிறது. புனிதமிகு கஅபாவை முதன்முறையாக பார்த்தவுடன் கேட்கப்படும் முதல் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்கிறது ஒரு நபிமொழி. முதன்முறையாக கஅபாவை பார்க்கும் போது "யா என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னிடம் கேட்கும் நலவான பிரார்த்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வாயாக!" என்று பிராத்திப்பதே சிறந்தது என்கின்றனர் மார்க்க அறிஞர்கள். ஒருமுறை புனித கஅபாவுக்கு அருகில் அமர்ந்து நான்கு பேர் பிரார்த்தனை செய்தனர். அவர்களில் முஸ்அப் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் யா அல்லாஹ்! என்னை மாண்புமிகு மக்கா நகரின் கவர்னராக ஆக்கிவிடு! என்றும், உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் யா அல்லாஹ்! என்னை சிறந்த மார்க்கச் சட்ட நிபுணராக ஆக்கிவிடு! என்றும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் யா அல்லாஹ்! என்னை சொர்க்கவாசியாக ஆக்கிவிடு! என்றும் அப்துல் மலிக் பின் மர்வான் (ரஹ்) அவர்கள் யா அல்லாஹ்! என்னை அரசனாக ஆக்கிவிடு! என்றும் பேரார்வதுடன் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் இந்நால்வரின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அப்பேற்றினை அவர்களின் வாழ்நாளில் வழங்கி சிறப்பித்தான் என்பதை சரித்திரம் சான்று பகிர்கிறது. (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சொர்க்கவாசி என்பதற்கு பல நபிமொழிகள் சான்று பகிர்கிறது) நூல்:- வாகிஆத் பகீர் ஒருவன் கஅபாவின் அருகில் அமர்ந்து அனுமதிக்கப்பட்டதில் எதனைக் கேட்டாலும் அதை அல்லாஹ் நிறைவேற்றத் தர போதுமானவன். எந்த தூய்மையான பிரார்த்தனையும் அங்கே மறுக்கப்படாது. சங்கைக்குரிய நகரம் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி) கூறினார்கள். ( وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَيَّ وَاللَّهِ لَوْلاَ أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ ) அல்லாஹ்வின் மீதாணையாக! (மக்காவே) நிச்சயமாக நீ அல்லாஹ்வின் பூமியில் சிறந்த இடமாக இருக்கின்றாய். மேலும், அல்லாஹ்வின் பூமியில் எனக்கு மிகுந்த நேசமிக்கதாகவும் இருக்கின்றாய். உன்னிடமிருந்து நான் மட்டும் வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால் (இங்கிருந்து) வெளியேறிச் சென்றிருக்கவே மாட்டேன். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அதிய்யி பின் ஹம்ராஃ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3850, இப்னுமாஜா-3108, முஸ்னது அஹ்மது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَزَالُ هَذِهِ الأُمَّةُ بِخَيْرٍ مَا عَظَّمُوا هَذِهِ الْحُرْمَةَ حَقَّ تَعْظِيمِهَا فَإِذَا ضَيَّعُوا ذَلِكَ هَلَكُوا ) மக்கள் சங்கைக்குரிய இதனை (அதாவது கஅபாவை) கண்ணியப்படுத்த வேண்டிய முறைப்படி கண்ணியப்படுத்தி வரும் காலமெல்லாம் மிக செழிப்பாக வாழ்வார்கள். என்றைக்கு இதன் கண்ணியத்தைப் புறக்கணிக்கிறார்களோ அன்றே அழிந்து விடுவார்கள். அறிவிப்பாளர்:- இயாஷ் பின் அபீ ரபீஆ மக்ஸூமி (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3110, மிஷ்காத் பக்கம்-328 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ، أَىُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ ) “நாயகமே! பூமியில் முதன்முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது என்று வினவினேன். அதற்கு அண்ணலார், ( الْمَسْجِدُ الْحَرَامُ ) “மஹ்ஜிதுல் ஹராம் (மக்காவில் உள்ள புனித கஅபா) என்ற இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான் பிறகு எது என்று வினவினேன். அண்ணலார், ( الْمَسْجِدُ الأَقْصَ ) “(ஜெருசலத்தில் உள்ள) அல்மஸ்ஜிதுல் அக்சா” என்று பதிலளித்தார்கள். நான் அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் என்று (இடைவெளி) இருந்தது? என்று வினவினேன். அண்ணலார், أَرْبَعُونَ سَنَةً ) ) 40 ஆண்டுகள் (மஹ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கழித்து அல்மஸ்ஜிதுல் அக்சா அமைக்கப்பட்டது.)” என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-3366 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நிகழ்ந்த நாளில், (மக்களை நோக்கி) ( إِنَّ هَذَا الْبَلَدَ حَرَّمَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَإِنَّهُ لَمْ يَحِلَّ الْقِتَالُ فِيهِ لأَحَدٍ قَبْلِي وَلَمْ يَحِلَّ لِي إِلاَّ سَاعَةً مِنْ نَهَارٍ فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لاَ يُعْضَدُ شَوْكُهُ وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ وَلاَ يَلْتَقِطُ إِلاَّ مَنْ عَرَّفَهَا وَلاَ يُخْتَلَى خَلاَهَا ) “அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அவன் பரிசுத்தமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமாகவே இருக்கும். மேலும் எனக்கு முன்னர் (வாழ்ந்த) யாருக்கும் இங்கு போர் செய்ய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (இந்த மக்கா வெற்றி நாளில்) பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தை புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமாகவே இருக்கும். இங்கு அதன் (முள்) மரங்களை வெட்டக்கூடாது. அதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக்கூடாது. இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்பு செய்து உரியவரிடம் சேர்ப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக்கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளை பறிக்கக்கூடாது" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-1834, முஸ்லிம்-2632 "வேட்டைப் பிராணியை விரட்டக்கூடாது என்பதன் பொருள் நிழலில் படுத்திருக்கும் பிராணியை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவது தான்" என்று நபிமொழி அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் விளக்கம் கூறினார்கள். நூல்:- புகாரீ-1833 மக்கா நகருக்கு உள்ள பெருமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தனி ஒரு மனிதரோ பலர் சேர்ந்தோ பேசி முடிவு செய்தோ அந்த பெருமை உண்டானதல்ல. அல்லாஹ்வின் ஆணையால் உறுதிப்படுத்தப்பட்ட பெருமை அது! ஆரம்ப காலம் முதல் இறுதி காலம் வரை அதன் பெருமை நீடிக்கும். மக்கா மண்ணுக்கு சிறப்பான தனி ஒழுக்க நெறி உண்டு என்பதை இந்த நபிமொழி தெளிவுப்படுத்துகிறது. கஅபாவின் எல்லை எவர் அதில் (ஹரம் ஷரீஃபில்) நுழைகிறாரோ அவர் அச்சம் தீர்ந்த நிம்மதியாளராக ஆகிவிட்டார். திருக்குர்ஆன்:- 3:97 அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن ماتَ في أحَدِ الحَرَمَيْنِ بُعِثَ مِنَ الآمِنِينَ يَوْمَ القِيامَةِ ) ஒருவர் மக்கா அல்லது மதீனா ஆகிய இரு நகரத்தில் எங்கு மரணமடைந்தாலும் மறுமை நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார். அறிவிப்பாளர்:- கைஸ் பின் மஹ்ரமா (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் ஆலஇம்ரான் வசனம்-97 உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மக்காவுக்கு வெளியே செய்யும் 70 பாவங்களைவிட மக்காவுக்குள் செய்யும் ஒரு பாவம் மிகவும் கனமானதாகும். நூல்:- கன்ஸுல் உம்மால் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ( لَوْ وجَدْتُ قاتِلَ عُمَرَ في الحَرَمِ ما هِجْتُهُ ) "நான் (என்னுடைய தந்தை) உமர் (ரலி) அவர்களை கொலை செய்த கொலைகாரனை கஅபாவின் எல்லைக்குள் காண நேரிட்டால் அவனை (பழிக்கு பழி தீர்ப்பதற்காக) வெளியேற்ற நிர்பந்தத்திற்குள்ளாக்க மாட்டேன்" என்று கூறினார்கள். இவ்வாறே அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் ஆலஇம்ரான் வசனம்-97 ஒரு கொலையாளி கஅபாவின் எல்லைக்குள் நுழைந்து விட்டால் அவனுக்கு அங்கு வைத்து தண்டனை வழங்கக்கூடாது. அவனை கஅபாவின் எல்லைக்கு வேளியே கொண்டு வந்து தான் தண்டனை வழங்க வேண்டும். ஆகவே அங்கே நிம்மதி, பாதுகாப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. பிற உயிரினங்களுக்கும், மரம் செடிகொடிகளுக்கும் தான். ஆகவே தான் கஅபாவின் எல்லைக்குள் பழிக்கு பழி தீர்ப்பதையும், வேட்டையாடுவதையும், மரம் செடிகொடிகளை பறிப்பதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. நிம்மதி அது எவ்வளவு காசு கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று. உலகம் நிம்மதியைத் தேடி எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? என்று ஓடுகிறது. மனிதன் அதற்காக ஆளாய் பறக்கிறான். இதுதான் நிம்மதியான இடம் என்று உலகில் உத்தரவாதம் வழங்கப்பட்ட ஒரே இடம் மக்கா நகரிலுள்ள கஅபா மற்றும் ஹரம் ஷரீஃப் எனும் அதன் எல்லைப்புறம் ஆகும். மக்காவில் உள்ள ஹரம் ஷரீஃப் மனிதர்களின் உள்ளத்திற்கு நிம்மதியளிக்கும் இடமாக இருப்பதினால் தான் பாவத்தின் பக்கம் அழைத்துச் செல்லும் அனைத்து செயல்பாடுகளையும் இறைவன் அங்கே தடுத்துள்ளான். நிர்வாணமாகவோ, பிறரைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிந்தோ (தவாஃப்) வலம் சுற்றுதல் கூடாது. ஏனெனில் அதன்மூலம் பாலுணர்வு தூண்டப்பட்டு நிம்மதிக்கு பாதிப்பு ஏற்படலாம். பொய் சத்தியம், பொய் சாட்சி, வீண் விவாதம், சண்டை சச்சரவு ஆகியவை அங்கே கூடாது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்கு வருகினற போதெல்லாம் கஅபாவின் எல்லைக்கு வெளியே ஒரு கூடாரம் அடித்து வைத்திருப்பார்கள். தனது பணியாளர்களுக்கு உத்தரவுவிடுவதானால் அந்த கூடாரத்திற்கு வந்து விடுவார்கள். பணியாளர்களை கண்டிக்கும்போது தடிப்பமான வார்த்தைகள் வந்துவிடக் கூடும். அவ்வார்த்தைகள் கஅபாவின் புனித தன்மைக்கு புறம்பானதாகி தனது குற்றம் பெரியதாகிவிடக் கூடும் என்பதற்காக இவ்வாறு செய்வார்கள் என்பது வரலாற்றுச் செய்தியாகும். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மக்காவில் ஒரு தீமை செய்தால் ஒரு லட்சம் தீமைகள் என எழுதப்படும். ஏனெனில் மக்காவின் புனிதத் தன்மையை மதிக்காமல் கெடுத்தற்கான தண்டனை ஆகும். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். கஅபாவின் எல்லைக்குள் தகாத காரியங்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. மீறிச் செய்தால் வெகுசீக்கிரத்தில் அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்காக நேரிடும். நூல்:- இத்திஹாப் கஅபாவின் எல்லைக்குள் செய்யப்படும் நற்செயல்களின் நற்கூலி எவ்வளவு பன்மடங்காக அதிகரிக்குமோ, அவ்வாறே அங்கு செய்யப்படும் குற்றச் செயல்களின் பாவச் சுமையும் பன்மடங்காக பெருகிவிடும் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். இறைத்தூதர்களில் எவரேனும் அவர்களது சமுதாயத்தினரால் பொய்படுத்தப்பட்டு வெளியாக்கப்பட்டாலோ அல்லது அந்த சமுதாயம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டாலோ அந்த இறைத்தூதர்கள் இறுதியாக ஒதுங்கும் தலம் கஅபா தான். அப்படி வந்து அந்த இறைத்தூதர்கள் தம் மரணம் வரை கஅபாவுக்கு அருகிலேயே தங்கி விடுவார்கள். தொழும் திசை மேலும் (நபியே) நீங்கள் எங்கு சென்றாலும் (தொழும்போது) "மஸ்ஜிதுல் ஹராமின்" பக்கமே உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். திருக்குர்ஆன்:- 2:150 அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلاَ يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ ) உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்க சென்றால் அவர் (கஅபா இருக்கும் திசையை) கிப்லாவை முன்னோக்க வேண்டாம். (அதன் திசையில்) தமது முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூ அய்யூப் அன்சாரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-144 முஸ்லிம்கள் ஏக இறைவன் அல்லாஹ்வை தொழும்போது புனித கஅபா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள். அந்த திசையே கிப்லா திசை என்பர். மல ஜலம் கழிக்கும் போது அத்திசையை நோக்கி அமர்வது கிப்லாவின் கண்ணியத்திற்கு இழுக்காகும். எனவே தான் ஒருவர் மலம் ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கியோ அதன் திசையில் தமது முதுகைக் காட்டியோ அமரக் கூடாது. மேலும் கிப்லாவின் திசையை நோக்கி காலை நீட்டி அமரவும் கூடாது. காலை நீட்டி படுக்கவும் கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்வது கண்ணியக்குறைவாகும் என்பது மார்க்கச் சட்டம். வரலாற்று படிப்பினை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 220 ஆண்டுகளுக்கு முன்பு யமன் நாட்டு மன்னர் துப்பவு இனத்தைச் சேர்ந்த அஸ்அதுல் ஹுமைர் என்பவர் மக்கா வந்தார். அப்போது மக்காவாசிகள் அந்த மன்னருக்கு உரிய மரியாதை செய்யவில்லை. அதனால் ஆத்திரமடைந்த மன்னர் ஹுமைர் மக்காவாசிகள் பெரிதும் மதிக்கின்ற கஅபாவை இடித்து தள்ள எண்ணினார். மன்னர் இவ்வாறு எண்ணிய நேரத்தில் கடுமையான நோய் ஏற்பட்டு உடல் நிலை பாதிப்புக்குள்ளானார். மன்னருக்கு பல்வேறு சிகிச்சைகள் செய்தும் உடல் சுகமடையவில்லை. இந்நிலையில் மன்னரிடம் எவரேனும் இந்த கஅபாவைப் பற்றி ஏதேனும் தவறாக எண்ணினால் அவர் பெரும் நோய்க்கு ஆளாவார். நீங்கள் அப்படி ஏதேனும் எண்ணிணீர்களா? என்று வினவப்பட்டது. அப்போது அவரும் ஆம்! என்று ஒப்புக்கொண்டார். மன்னருக்கு இந்த நோய் நீங்க வேண்டுமானால் மன்னர் உம்ரா செய்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரும்படி ஆலோசனை கூறப்பட்டது. அவ்வாறே மன்னர் உம்ரா செய்து பாவமன்னிப்பு கோரினார். அல்லாஹ்வின் அருளால் மன்னரின் நோய் நீங்கியது. உடல் நலத்தை நல்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நோக்குடன் மன்னர் ஹுமைர் கஅபாவின் மீது "கிஸ்வா" எனும் போர்வையை போர்த்தினார். இதுதான் கஅபாவின் மீது போர்த்தப்பட்ட முதல் போர்வை கிஸ்வா ஆகும். இது உலர்ந்த பனை ஓலைகளாலும், நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்தது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அஸ்அதுல் ஹுமைர் என்ற மன்னர் தான் முதன்முதலில் கஅபா முழுவதற்கும் திரையிட்டவர் ஆவார். நூல்:- அக்பாரு மக்கா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 50 நாட்களுக்கு முன்பு யமன் நாட்டின் கிருஸ்தவ மன்னராக இருந்த அப்ரஹா 60 ஆயிரம் போர் வீரர்கள் மற்றும் பலமான யானைப் படையுடனும் திரண்டு வந்து கஅபாவை இடிப்பதற்கு எண்ணினான். ஆனால் அல்லாஹுதஆலா மிக சிறு உருவம் கொண்ட அபாபீல் என்ற பறவைகள் மூலம் கல்மாரிப் பொழியச் செய்து மன்னன் அப்ரஹாவையும், அவனது பெரும் படைகளையும் அழித்தொழித்தான். இந்த வரலாற்றை திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் பேசுகிறது. சுருங்கக்கூறின், எவராக இருந்தாலும் சரியே! புனித கஅபாவைக் கண்ணியக்குறைவாக எண்ணினாலும், அல்லது செயல்பட்டாலும் அதன் பாவ வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். நாம் கஅபா எனும் இறையில்லத்தின் கண்ணியம் பேணி, அதை கண்ணாற கண்டுகளித்து அதன் வளாகத்தில் மனத்தூய்மையுடன் எண்ணிலடங்கா வழிபாடுகள் புரிவதற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்! நன்றி மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி,

Comments

Popular posts from this blog

ஆசை ஆசையாய்